453. சென்னையின் நாதியற்ற புராதானச் சின்னங்கள்
சென்னையின் புராதானச் சின்னங்களான பல ஆங்கிலேய காலத்துக் கட்டடங்கள் (Heritage buildings) பராமரிப்புக்கான சரியான அரசு திட்டம் இல்லாததால், நாதியற்று சீரழிந்து சிதிலமடைந்து (அல்லது இடிக்கப்பட்டு!) வருகின்றன. சென்னையில் 200-க்கும் மேற்பட்ட (100 ஆண்டுகளுக்கு மேல் பழமை மிக்க) வரலாற்று சிறப்பு மிக்க கட்டடங்கள் இருந்தும், இவற்றைப் பாதுகாக்க சட்டம் (Heritage act) எதுவும் இதுவரை இயற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றில் சில மக்கட் போராட்டத்தால் காப்பற்றப்பட்டிருப்பினும், அவற்றை பாதுகாப்பது குறித்து யாரும் கவலைப்படுவதில்லை :( சென்னை தனது வரலாற்று சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்களை (கேட்பார் / கவனிப்பார் அற்று) கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.
1. கோகலே கூடம்: 94 வருடங்கள் பழமையான இதன் உட்பகுதிகள், நீதிமன்றத்தின் தடை (இன்று) வருவதற்கு முன்பாகவே, இடிக்கப்பட்டு விட்டன. YMIA-இல் உள்ள சிலரது பண ஆசைக்கு இது பலியாகி விட்டது. பெசண்ட் நினைவுக் கட்டடம் (Besant Memorial Building) என்றும் அழைக்கப்படும் இது ஆர்மேனியன் தெருவில் உள்ளது. இந்த இடத்திலிருந்து தான் அன்னி பெசண்ட் அம்மையார் சுயாட்சிக்கான போராட்டத்தை தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "விழித்தெழு இந்தியா" என்ற தலைப்பில் வரலாற்று சிறப்பு மிக்க தொடர் உரைகளை அன்னி பெசண்ட் அம்மையார் இதே கூடத்திலிருந்து தான் நிகழ்த்தினார்!
இது 30000 சதுர அடி பரப்பளவு கொண்ட மூன்று மாடிக் கட்டடம் இது. 1916-இல் இவ்விடத்தில் சுயாட்சி லீக் தொடங்கப்பட்டது. கோகலே கூடத்தில் மகாத்மா காந்தி, தாகூர், சத்தியமூர்த்தி போன்றோர் பிரசித்தி பெற்ற எழுச்சி உரைகளை ந்கழ்த்தியுள்ளனர். அன்னி பெசண்ட் அம்மையார் 'மதராஸ் பாராளுமன்றம்' (Madras Parliament) என்ற இயக்கத்தைத் தொடங்கினார். அவ்வியக்கமே, VK கிருஷ்ணமேனன், KC ரெட்டி (கர்னாடகாவின் முதல் முதல்வர்), R வெங்கட்ராமன் போன்றோருக்கு பயிற்சிக்களமாக விளங்கியது.
அது போலவே, 1940, 1950களில் பிரசித்தி பெற்ற கர்னாடக இசை மேதைகளான முசிரி சுப்ரமணிய ஐயர், அரியகுடி ராமானுஜ அய்யங்கார், மதுரை மணி ஐயர், ராஜரத்தினம் பிள்ளை, GN பாலசுப்ரமணியம், KP சுந்தராம்பாள், DK பட்டம்மாள் போன்றொர் இங்கு இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.
இப்போது அதன் புராதனத்தன்மை குன்றா வண்ணம், அதன் வெளிப்புறத்தையாவது சீரமைக்க முடியுமா என்று YMIA-வில் நல்லவர் யாராவது யோசிப்பார் என்று நம்புவோம் !
இந்திய விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடையதும், பாரம்பரியச் சிறப்பு மிக்கதுமானவற்றின் மீது கூட அக்கறை இல்லாத நாமெல்லாம் உருப்படுவோமா ? :(
2. அட்மிரால்டி ஹவுஸ்: சட்டமன்ற உறுப்பினர் விடுதி அமைந்துள்ள அரசு எஸ்டேட் வளாகத்தில் இருக்கும், 208 வருட பாரம்பரியமிக்க இந்த கட்டடத்தை, அரசு மனது வைத்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம். அடிப்படை பராமரிப்பு கூட இல்லாமல் சீரழிந்து போய் இடிந்து விழும் நிலைக்குத் தள்ளப்பட்ட இக்கட்டடம் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது. அவ்விடத்தில், ரூ.200 கோடி செலவில் சட்டமன்ற வளாகம் கட்டப்படவுள்ளது.
3. காவல் தலைமையகம், மெரினா: INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) என்ற அமைப்பும், சில புராதான ஆர்வலர்களும் சேர்ந்து நீதிமன்றத்துக்குச் சென்று தடை வாங்கியதால், ஆங்கிலேயக் கட்டடக் கலையின் (Colonial Architecture) சிறப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தும், 70 வருட பழமையான இக்கட்டடம், இடிக்கப்படுவதிலிருந்து தப்பித்தது. 1996-இல் புதுப்பிக்கப்பட்டது.
4. ராணி மேரிக் கல்லூரி, மெரினா: 110 ஆண்டுகள் பழமையான இவ்வளாகக் கட்டடங்களை இடித்து விட்டு அங்கு புத்தம்புது சட்டமன்ற வளாகம் அமைக்க அப்போதைய முதல்வர் ஜெ தீட்டிய திட்டம் ஆசிரியர்-மாணவி கூட்டணியின் போராட்டத்தால் கைவிடப்பட்டது. கடற்கரைப் பகுதியில் உள்ள கட்டடங்களை இடிப்பதற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை பெற்றாக வேண்டிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அமைச்சர் TR.பாலு ஜெயலலிதாவை தோற்கடிப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் என்றாலும், இந்த புராதானச் சின்னம் காப்பாற்றப்பட்டதில் பலருக்கும் மகிழ்ச்சியே.
5. பாரத் இன்சூரன்ஸ் கட்டடம், அண்ணா சாலை: 1897-இல் "கார்டில் பில்டிங்" என்ற பெயரில் கட்டப்பட்ட இது, இந்தோ-சரசெனிக் கட்டடக்கலைக்கு (Indo-Saracenic architecture) ஓர் அற்புதமான வரலாற்றுச் சான்றாக, இன்றும் நின்று கொண்டிருக்கிறது. இதன் உரிமையாளரான LIC நிறுவனம், ஆகஸ்ட் 2006-இல் (பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் செலவு அதிகமாகிறது என்ற காரணத்துடன்!) இதை இடிக்க முற்பட்டபோது, INTACH நீதிமன்றம் சென்று இடிப்பதை தடுத்து நிறுத்தியது. தற்போது இக்கட்டடம், கொஞ்சம் கொஞ்சமாக சீரமைக்கப்பட்டு வருகிறது.
உங்களுக்காக, இன்னும் சில புராதானச் சின்னங்களின் புகைப்படங்கள்:
விவேகானந்தர் இல்லம் (1842)
ரிப்பன் கட்டடம் (1913)
சாந்தோம் சர்ச் (பதினாறாம் நூற்றாண்டு)
தியோசாபிகல் ஸொஸைடி (அடையாறு)
செனேட் இல்லம் (1874, சென்னைப் பல்கலைக்கழக வளாகம்)
எ.அ.பாலா
சில புகைப்படங்களுக்கு நன்றி:
http://timkarolsvoboda.blogspot.com
http://flickr.com/photos/bratboy76/